வெள்ளி, 1 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 01:: படித்த பாடம் என்ன?



'பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது' என்று எழுதியிருந்தேன்.

திடுக்கிடும் அனுபவம் பற்றி, வாசகர்கள் பலரும் பல தினுசாக எழுதியதில் எனக்கே குழம்பிப் போய்விட்டது!





நான் ஒரு முன்-ஜாக்கிரதை முத்தண்ணா. ஆதலால், ரயிலில் எனக்கு ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கையை விட்டு (ஒரு கையை கூட விடாமல்) இந்தண்டை, அந்தண்டை நகராமல், என்னுடைய மஞ்சள் பையை பத்திரமாக பிடித்திருந்தேன். அம்மா ஏற்கெனவே சொல்லியிருந்தாள் - யாராவது ஏதாவது பேசினால் அதை நம்பி விடாதே.எவனாவது திருடன், "இங்கே பாரு தம்பி / அங்கே பாரு தம்பி என்று போக்குக் காட்டி, பையை, பர்ஸை கவர்ந்து சென்று விடுவான். அப்புறம் நீ அசோக லேலண்ட் போகாமல் சோக லாண்டிங் ஆக வேண்டியதுதான்." என்று. முன் ஜாக்கிரதை முத்தண்ணா, அதி முன் ஜாக்கிரதை அப்பண்ணாவாக மாறி, அப்படி பயணம் செய்தேன்.


ஆனாலும் ஒரு பச்சப் புள்ளை எவ்வளவு நேரம்தான் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டிருக்க முடியும்? இயற்கை என்னும், இளைய கன்னி விடுத்த அழைப்பை (nature's call தான். வேறு ஒன்றும் விபரீதக் கற்பனைகள் வேண்டாம்!) தட்ட முடியாமல், எழுந்தேன். மஞ்சள் பையையும் எடுத்துக் கொண்டு செல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். அப்பொழுது பக்கத்து சீட்டில் இருந்த துப்பறியும் சாம்பு (நான் வைத்த பெயர்தான்!) "தம்பி ஒன்றுக்குப் போகணுமா? பையை சீட்டுக்குக் கீழே வைத்துவிட்டு, சீட்டுல கர்ச்சீஃப் போட்டுட்டு போங்க. நான் பார்த்துக்கறேன்" என்றார்.


எனக்கு ஒரே சந்தோஷம். வேகமாக கைக்குட்டையை பாண்ட் பையிலிருந்து உருவி வெளியே எடுத்து, சீட்டில் போட்டுவிட்டு, கனவேகமாக இலக்கு நோக்கி சென்றேன். தண்ணீர் பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை. :))) கருத்துரைப்பவர்கள் கவனியுங்கள். கழிப்பறையை விட்டு வெளியே வருவதற்கு முன் அங்கிருந்த கண்ணாடியில் பார்த்து, தலை சீவிக் கொண்டு, வாஷ் பேசின் குழாயில் தண்ணீர் பிடித்து, முகம் கழுவி, கர்ச்சீஃப் தேடி போன கை, பிரேக் போட்டு நின்றது. கர்ச்சீஃபைத்தான் சீட்டில் போட்டுவிட்டு வந்தேனே! சரி, முகத்தில் உள்ள ஈரம காய, டிரெய்ன் கதவின் ஜன்னலுக்கு அருகில் நின்று, ரயில் செல்லும் திசையைப் பார்க்கலாம். முகத்தில் மோதுகின்ற எதிர்க் காற்றில், ஈரம உலர்ந்துவிடும், என்று நின்றேன்.



அப்பா கூறிய வார்த்தைகள், புத்திமதிகள் எல்லாம் காதில் ஒலித்தது. எக்மோர் ஸ்டேஷனுக்கு உன்னுடைய அண்ணன் நிச்சயம் வந்து, உன்னை புரசவாக்கம் அழைத்துப் போவார். அப்படி வரவில்லை என்றால், கவலைப் படாதே. எக்மோர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், ரோடை க்ராஸ் செய்து, செருப்புக் கடைக்கு எதிரில் உள்ள பஸ் ஸ்டாப்பில் போய் நின்று கொள். ரூட் நம்பர் பதினாறு, இருபத்து இரண்டு இரண்டில் எது வந்தாலும் அதைப் பிடித்து, புரசவாக்கம் கங்காதீஸ்வரர் டாங்க் ஸ்டாப்பிங் என்று கேட்டு டிக்கெட் வாங்கிக் கொள். பதினைந்து பைசா தான் டிக்கெட். உன்னுடைய பர்சில் சில்லரையாக இரண்டு பத்து பைசாக்கள், ஒரு ஐந்து பைசா வைத்துக் கொள். மெட்ராஸ்ல பஸ் டிக்கெட் வாங்க சில்லறை இல்லை என்று ரூபாய் நோட்டைக் கொடுத்தோம் என்றால், இரக்கம் பார்க்காமல் இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இதை நினைத்துப் பார்த்தவாறு கை அனிச்சையாக பாண்ட் பையில் இருந்த பர்ஸை தொட்டுப் பார்க்கச் சென்று, என்னுடைய மூளைக்கு ஒரு அவசரத் தந்தியை அனுப்பியது.



பர்ஸைக் காணோம்.

நான் திடுக்கிட்டேன். (இதுதாங்க திடுக்கிட்ட அனுபவம்!)

அப்புறம் நான் என்ன செய்தேன்? அதை அடுத்த பதிவில் சொல்கின்றேன். 


*************************************

அசோக் லேலண்டில் கற்றது:

அப்ரெண்டிசாக இருந்த காலத்தில், என்ஜின் அசெம்பிளி பிரிவில் ஒரு நாள், என்ஜினை ஓவர் ஹெட் கிரேன் வைத்து தூக்கி, அதை அந்தரத்தில் நிறுத்தி, என்ஜினின் அடிப்பாகத்தில் இருக்கின்ற சம்ப ஸ்க்ரூகளை ரி-டைட் செய்யும் நண்பர் ஒருவர், "நீ சூப்பர்வைசர் ட்ரைனியா?" என்று கேட்டார். "ஆமாம்" என்றேன். இந்த கிரேன் சரியா வொர்க் பண்ணலை. அதோ அங்கே என்ஜின் ரெக்டிபிகேஷன் செக்ஷன்ல ஒரு கிரேன் இருக்கு பாரு, அதை இயக்கி, இங்கே கொண்டுவா" என்றார். நான் என்ஜின் ரெக்டிபிகேஷன் சென்று, அந்தக் கிரேன் பக்கத்தில் இருந்த ஒருவரிடம், "நான் கிரேனை எடுத்துச் செல்லலாமா?" என்று கேட்டேன்.


அதற்கு அவர், "ஊஹூம் - கூடாது. எனக்கு அதுல வேலை இருக்கு" என்றார்.


நான் திரும்பி வந்து, முதலில் என்னிடம் கிரேன் கொண்டு வரச் சொன்னவரிடம், "கிரேன் பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர், அது தனக்கு வேண்டும், நமக்குத் தரமுடியாது என்கிறார்" என்றேன்.






இவர் என்னைப் பார்த்துச் சொன்னது இன்னமும் கீதோபதேசமாய் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. "தம்பி நீ கம்பெனிக்கும் புதுசு, ஊருக்கும் புதுசு என்று நினைக்கின்றேன். நான் சொல்வதை கவனமா கேட்டுக்க. நமக்கு நம்ம வேலை முக்கியம். நம்மளும் கம்பெனி வேலைதான் செய்கிறோம். அது கம்பெனி கிரேன். அவரு வீட்டிலிருந்து கொண்டுவரவில்லை. இங்கே ரொம்பப் பேருங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. யாராவது அவர்களிடம் போய், ஏதாவது பெர்மிஷன் கேட்டா கெத்தா, 'முடியாது' என்று மறுத்து, நம்மைத் திருப்பி அனுப்பி விடுவார்கள். நீ நேராகப் போய், அந்தக் கிரேனை, யாரிடமும் பெர்மிஷன் கேட்டுக் கொண்டிராமல், 'ரைட் ராயலா' எடுத்துக் கொண்டு வந்துகொண்டே இருக்கணும். நம்ப வேலை முடிந்ததும், அந்தக் கிரேனை, அங்கேயே கொண்டுபோய் விட்டு விடலாம். நம்முடைய நோக்கம் நல்லதாக இருந்தால், நாம் யார் தயவுக்கும், அனுமதிக்கும் காத்திருக்க வேண்டியது இல்லை."

உடனே, வீர நடை போட்டு, கிரேனிடம் சென்றேன், கிரேனை இழுத்து வந்து, அவரிடம் கொடுத்தேன். கிரேனை எடுக்கக் கூடாது என்று கூறியவர், ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்!

***********************************



கொசுறு:

நாற்பதாண்டு கால நண்பன் ராகவேந்திரனிடம், (இப்பொழுது அவர் இருப்பது ஸ்ரீரங்கத்தில்) நேற்று தொலைபேசினேன். "டேய் பார்த்தியா? ஐ பி எல் போட்டிக்கு நடுவே தோனி நம்ப யுனிஃபார்ம் போட்டுகிட்டு வந்து, நம்ப கம்பெனி பத்தி இந்தியில ஏதோ சொல்றாரு!" என்றான்!
    

11 கருத்துகள்:

  1. மீண்டும் ரசித்தேன்.... தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. இந்தத் திடுக்கிட்ட அனுபவமும் திடுக்கிடடாமல் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். கூடவே கொசுறாகத் தரும் செய்திகள் மிக அருமை! நல்ல தக்காளி, கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி கொசுறாகக் கிடைத்தால் வரும் சந்தோஷம் இதிலும் வந்தது.

    பதிலளிநீக்கு
  3. முன் ஜாக்கிரதை முத்தண்ணாவிற்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்ன என்பதை படிக்க் தொடர்கிறேன்.


    நம்முடைய நோக்கம் நல்லதாக இருந்தால், நாம் யார் தயவுக்கும், அனுமதிக்கும் காத்திருக்க வேண்டியது இல்லை."


    அறிவுரை அருமை.

    பதிலளிநீக்கு
  4. திடுக்கிடும் சம்பவம்// முஜாமு இப்படி பர்சை விடலாமோ?!!! படித்து திடுக் பதில் சிரிப்புதான்!! ரசித்தேன் பதிவை ரொம்ப.

    நீங்கள் கற்ற பாடம் ...நம் நோக்கம் நல்லதாக இருந்தால்......யெஸ் அதே அதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யம் தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு