டூட்டி முடிந்து வீடு திரும்பிய வீராச்சாமி தன் மனைவியின் கண் ஜாடை பார்த்து, சற்றுக் குழம்பி, 'என்ன?' என்ற பாவனையில் புருவத்தை உயர்த்தினார்.
மனைவி மல்லிகா தன் உதட்டருகே ஒரு விரலை வைத்து, கைகளை 'குழந்தை' என்பதற்கு ஏற்ப அபிநயம் பிடித்து, அறைக்குள்ளே சைகை செய்து, ' அழுகிறாள்' என்பது போன்று நடித்துக் காட்டினாள்.
வீராச்சாமி, 'சரிதான் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஏதோ சிறு பிரச்னை போலிருக்கு. நான் தலையிட்டு, மத்யஸ்தம் பண்ணவேண்டும் போலிருக்கு' என்று நினைத்தவாறு அறைக்குள் சென்றார்.
" ரம்யா - என்னம்மா பிரச்னை? ஏன் அழுகிறாய்? அம்மா என்ன சொன்னா? "
அதுவரை மௌனமாகக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த ரம்யா, அப்பாவைப் பார்த்தவுடன், விசித்து விசித்து அழத் துவங்கிவிட்டாள்.
" என்னம்மா? என்ன ஆச்சு? என்கிட்டே சொல்லும்மா ? உன்னை அழவிட்டது யாராக இருந்தாலும் சுட்டுப்போட்டுடறேன்!" என்று வீராச்சாமி விளையாட்டாக சொன்னார்.
ரம்யா பதின்ம வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஏழாம் வகுப்புப் படிக்கும் பெண்.
அழுதுகொண்டே - தனக்கு எதிரே உள்ள தினசரியில் வெளியாகியுள்ள படத்தையும் செய்தியையும் சுட்டிக் காட்டினாள்.
காலையில் அவரும் படித்து அதிர்ந்துபோன செய்திதான் அது. ஒரு பெண்ணை கற்பழித்துக் கொலை செய்து நெருப்பில் எரித்த கொடூரமான சம்பவம்.
" நானும் காலையில் படித்த செய்திதான் ரம்யா. என்ன செய்வது? இந்த மாதிரி கொடூரங்கள் நிகழ்த்தும் கொடியவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அது போகட்டும் - யாரோ இப்படி இறந்துபோனதற்கு நீ ஏன் அம்மா இவ்வளவு வருத்தப்படுகிறாய், அழுகிறாய்? "
" யாரோ இல்லை அப்பா அது. என் தோழி வசுந்தராவின் அம்மா. இன்றைக்கு வசுந்தரா வகுப்புக்கு வரவில்லை. கிளாசில் என்னுடன் படிக்கும் தோழிகள், 'பாவம்டி - வசுந்தராவின் அம்மாவை யாரோ கொன்னுட்டாங்களாம்' என்று சொன்னார்கள். ஸ்கூல் முடிந்ததும் நாங்கள் எல்லோரும் வசுந்தராவின் வீட்டுக்குப் போய் அவளைப் பார்த்தோம். வசுந்தரா பொங்கி பொங்கி அழுதுகொண்டே இருந்தாள். அதைப் பார்த்ததும் எங்கள் எல்லோருக்கும் அழுகை வந்துவிட்டது. அப்போதிலிருந்து என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை அப்பா! "
" இப்போ சொல்லுங்க அப்பா - வசுந்தராவை அழவைத்தவர்களை உங்களால் சுட்டுப்போட முடியுமா? "
இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை.
========================
இந்த கேஸ் விசாரணை அவருடைய போலீஸ் ஸ்டேஷனிலேயே பதிவு செய்யப்பட்டது மறுநாள் அவருக்குத் தெரியவந்தது. தன்னுடைய மேலதிகாரியின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டதையும் தெரிந்துகொண்டார். அந்தக்குழுவில் அவர் இல்லை.
ஒரு வார விசாரணை ஆமை வேகத்தில் நடந்தது. அரசாங்கத்திடமிருந்து அன்றாடம் கேஸ் பற்றி விவரங்கள் கேட்டு நச்சரிக்கத் தொடங்கினர்.
சட்டசபை, நாடாளுமன்றம் வரை பிரச்னை போய்விட்டது.
மேலதிகாரி வெள்ளிக்கிழமை அன்று காலை ஃபோன் செய்து வீராச்சாமியைக் கூப்பிட்டார்.
அவசரம் அவசரமாக ஸ்டேஷனுக்கு விரைந்தார் வீராச்சாமி.
மேலதிகாரி சொன்னார். " குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு, விசாரணைக்குழுவில் எல்லோரும், விசாரணையின் இறுதிப்பகுதியாக crime spot சென்று குற்றத்தை re-enact செய்யச் சொல்லப்போகிறோம். இதன் மூலம் இந்தக் கேஸில் விடுபடாத பல உண்மைகள் தெரிந்துகொள்ள முடியும். நாங்கள் ஸ்பாட்டில் இருக்கும்போது, நீங்களும், உங்கள் சக ஆபீசர் ராம்குமாரும், வேனிலிருந்து குற்றவாளிகளை கவனமாக கண்காணித்துக்கொண்டிருங்கள். குற்றவாளிகள் தப்பிச்செல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது உங்கள் இருவரின் பொறுப்பு. அவர்கள் தப்பிச்சென்றுவிட்டால், போலீஸ் துறைக்கும் மக்களிடம் கெட்ட பெயர், அரசாங்கமும் நம்மை சும்மா விடாது. புரிந்ததா?"
" புரிந்தது சார் " என்றார் வீராச்சாமி.
================================================